தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒன்பது நாடுகள் இணைந்து தெற்காசியப் பிராந்திய துறைமுகங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், கொமரூஸ், மடகஸ்கார், மாலைதீவு, மொறீசியஸ் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளே இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
கடந்த திங்கட்கிழமை மாலைதீவில் இந்த அமைப்பின் தொடக்க நிகழ்வு அந்நாட்டு அரச தலைவர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய மாலைதீவு அரச தலைவர், உலக கடற்பயணங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை இந்து சமுத்திரத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற வேளையில் இப்பகுதியில் உள்ள துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது அத்தியாவசியமாக உள்ளது. இந்த தேவையை கவனத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அனைத்துலக கட்டமைப்பு பயனுள்ள ஒன்றாகும் என்றார்.
அங்கு கலந்துகொண்டு பேசிய அமெரிக்க கடலோர பாதுகாப்பு ரியர் அட்மிரல் கிரெய்க் ஈ.போன், இந்த அமைப்பின் உருவாக்கம் இந்து சமுத்திரத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளுக்கு இனிமேல் பொறுமை காக்கப்பட மாட்டாது என்ற தெளிவான செய்தியைக் கூறியுள்ளது என்றார்.
அங்கு கலந்து கொண்ட சிறிலங்காவுக்கும், மாலைதீவுக்குமான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக், துறைமுகங்கள் எனப்படுபவை பயங்கரவாதிகளின் இலக்குகளாகவே இருந்து வந்துள்ளன. ஒரு நாட்டின் துறைமுகம் தாக்குதலுக்குள்ளாகும் போது அந்நாட்டின் பொருளாதாரம் இலகுவில் அதல பாதாளத்துக்கு சென்று விடுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டார்.