மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசடியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அரசடி காவல்நிலையத்தைச் சேர்ந்த இவர், பணி முடிந்து உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டார்.
உந்துருளியில் வந்த இருவரே அவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றிருப்பதாக அரசடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவரின் உடலம் மட்டக்களப்பு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்ற பின்னர் காவல்துறையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையிலேயே காவல்துறையைச் சேர்ந்த மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரில் கடந்த 11 ஆம் நாள் காவல்துறை அதிகாரி ஒருவரும் கடந்த 16 ஆம் நாள் காத்தான்குடி நாவற்குடாவில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.