சர்வதேச ரீதியில் தனக்கு எதிராகக் கிளர்ந்துள்ள கடும் எதிர்ப்பு அலைகளுக்கு மத்தியில் இலங்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் மீண்டும் உறுப்புரிமை பெறுவதற்கான தேர்தலில் போட்டியிடுகின்றது.
நியூயோர்க்கில் நடைபெறும் இத்தெரிவில் வெற்றி கிட்டும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக இலங்கை அரசுப் பிரதிநிகள் உறுதி வெளியிட்டுள்ள போதிலும், இலங்கையை எப்படியும் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதில் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளும் சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட தரப்புகளும் மிகத் தீவிரமாக உள்ளன என்று கூறப்படுகின்றது.47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இக்கவுன்ஸிலுக்கு ஆசியப் பிராந்தியத்தில் இருந்து நான்கு நாடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகால உறுப்புரிமைக்குத் தெரிவு செய்யப்படவேண்டும்.அந்த நான்கு இடங்களுக்கான போட்டியில் பஹ்ரைன், ஜப்பான், பாகிஸ்தான், தென்கொரியா, கிழக்குத் திமோர் ஆகியவற்றுடன் இலங்கையும் உள்ளது.இந்த ஆறு நாடுகளில் ஏதேனும் இரண்டு நாடு தேர்தலில் தோல்வியுறுவது தவிர்க்க முடியாததாகும்.
மோசமான மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச ரீதியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை இக்காரணத்தினால் இத்தேர்தலின்போது ஏனைய நாடுகளினால் தோற்கடிக்கப்படலாம் என்று கருதப்படுகின்றது.
இலங்கையில் மனித உரிமைகள் மிக மோசமாக இடம்பெற்று வருகையில், கவுன்ஸிலில் மீண்டும் இலங்கைக்கு இடமளிப்பது கவுன்ஸிலின் தராதரத்தைக் கொச்சைப்படுத்திப் பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடும் என்ற பொதுவான கருத்து அரச சார்பற்ற அமைப்புகள் மத்தியிலும் மனித உரிமை ஆர்வலர்களிடமும் உருவாகியுள்ளமை இலங்கைக்குப் பாதகமான விடயமாக அமைந்துள்ளது.மனித உரிமைக் கவுன்ஸிலில் இடம்பெறுவதற்கு இலங்கைக்கு இடமளிக்க வேண்டாம் எனக் கோரும் பிரசாரத்தை சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை போன்றவை தீவிரமாக முன்னெடுத்துள்ளன.சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரமுகர்கள் உட்படப் பலர் இலங்கைக்கு இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாமெனப் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெற்றவர்கள் வரிசையில் தென்னாபிரிக்கப் பேராயர் டெஸ்மண்ட் டூட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஆகியோரைத் தொடர்ந்து ஆர்ஜென்ரீனாவின் அடொல்போ பேர்ஸ் எஸ்கியூவெலும் இலங்கைக்கு வாக்களிக்க வேண்டாமெனப் பகிரங்கமாகக் கோரியுள்ளார் என்பதை சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் உலக நாடுகளுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஆர்ஜென்ரீனா செய்தித் தாளொன்றில் தாம் எழுதியுள்ள கட்டுரையில், இலங்கையில் அரச படையினரால் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள், சட்டத்திற்கு விரோதமான படுகொலைகள், நூற்றுக்கணக்கானோர் வலுக்கட்டாயமாகக் காணாமற் போகச் செய்ப்படுதல் போன்றவை 1970 80 களில் இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும் தமது சொந்தப் பிரஜைகளுக்கு எதிராக மேற்கொண்ட அராஜகங்களை நினைவுபடுத்துபவையாக உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். சொந்த மக்களை அவர்களது வீடுகளிலிருந்து நள்ளிரவில் பலவந்தமாகத் தூக்கிச் செல்வது, அதன் பின்னர் அவர்கள் குறித்த தகவல்கள் எவையும் தெரியாமல் போவது போன்றவற்றை விட மிக மோசமான கொடூரத்தை அரசு ஒன்று இழைக்க முடியாது என்பது இலத்தீன் அமெரிக்க மக்களுக்கு நன்கு தெரியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசை இத்தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் அந்த நாட்டு மக்களுக்கு இலத்தீன் அமெரிக்க மக்கள் பாரிய சேவையாற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜென்ரீனாவின் இராணுவ அரசால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தமைக்காக 1980 இல் எஸ்கியூவெலிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த பல அரச சார்பற்ற அமைப்புகளும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பும் இலங்கைக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கோரி ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்குப் பகிரங்கக் கடிதங்களை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் இலங்கை தெரிவுசெய்யப்படுவது, ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் தராதரம், மதிப்பு, கௌரவம் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கி, கவுன்ஸிலின் மீதான நம்பிக்கையைச் சர்வதேச ரீதியில் சிதறடிக்க வைத்துவிடும் என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரம், இலங்கைக்கு எதிரான கருத்து நிலைப்பாட்டை வலிமையாக ஏற்படுத்தியிருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.