பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி தலைவர் சாந்தன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பிரதேசத்தைச் சேர்ந்த 3 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.பிள்ளையான் தரப்பினரால் இந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி தலைவர் சாந்தனும் அவரது மெய்ப்பாதுகாவலரும் இன்று பகல் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளராகவும் சாந்தன் கடமையாற்றினார் எனத் தெரியவருகிறது.
சாந்தனின் படுகொலைச் சம்பவத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், முஸ்லிம் ஆயுததாரிகளுமே பொறுப்பாளிகள் என பிள்ளையான் குழு குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிசார் இப்பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளதாகவும்,தமிழ் - முஸ்லீம் பிரதேசங்களில் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் வீதிகளில் நடமாடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் மூலமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் வீதிகளில் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊடரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் காத்தான்குடி உள்ளிட்ட மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
வீதிகளில் கலகத் தடுப்பு காவல்துறையினரும் படையினரும் கவச வாகனங்கள் சகிதம் குவிக்கப்பட்டுள்ளனர். தனியாரின் போக்குவரத்து வாகனங்கள் படையினரின் பலத்த பாதுகாப்புடன் சென்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே மண்முனையிலும் முஸ்லிம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதனை உறுதிப்படுத்த இயலவில்லை என்று எமக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.