ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாகவே ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் இலங்கை அங்கத்துவத்தை இழந்தது. எதிர்காலத்தில் நாட்டு உதவிகளும் தடைப்படும் அபாயமும் தோன்றியுள்ளது என ஐ.தே.க. எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் அங்கத்துவத்தை அரசாங்கம் இழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆட்கடத்தல்கள்,கப்பம் கோருதல், கொலைகள் என நாளுக்கு நாள் நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இது தொடர்பாக பல முறை நாம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம். பல அமைப்புக்களும் அறிவித்தன. வெளிநாட்டு மனித உரிமைகளுக்கான அமைப்புக்களும் கண்டனங்களை வெளியிட்டன. ஆனால், அரசாங்கம் எதற்கும் செவிமடுக்கவில்லை. மனித உரிமை மீறல்களை தடுக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மனித உரிமைகளை பாதுகாக்க அமைச்சர் இருக்கிறார். வெளிநாட்டமைச்சர் இருக்கிறார். இவர்கள் அனைவரும் நாட்டின் அங்கத்துவத்தை பாதுகாத்துக்கொள்ளத் தவறிவிட்டனர்.
இலங்கையில் இடம்பெறும் நிகழ்வுகளை உலகமே அவதானித்துக்கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இடம்பெற்ற வாக்குக்கொள்ளை, பலாத்காரங்கள் இவையனைத்துமே எமது நாட்டின் கௌரவத்திற்கு பங்கம் விளைவித்துள்ளன. எனவே, ஐ.நா. மனித உரிமை பேரவையின் அங்கத்துவத்தை இழந்ததற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்.
இனிமேலாவது மனித உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவிகள் தடைப்படும் அபாயகரமான நிலை ஏற்படும். அத்தோடு பல்வேறு சலுகைகளையும் இழக்க நேரிடும்