நாடுகளின் மனித உரிமை பேரவைக்கு புதிய உறுப்பு நாடுகளை தெரிவுசெய்வதற்காக நியூயோர்க்கில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் மனித உரிமையை பாதுகாக்கும் நாடாக இலங்கையை 101 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இது எமக்கு கிடைத்த பாரிய தோல்வியல்ல என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். புலிகளுக்கு சார்பான அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தே நாம் இந்த தேர்தலில் போட்டியிட்டோம் இந்த தேர்தலில் 101 வாக்குகளை பெற்று நாம் தோல்வியடைந்தமை புலிகளுக்கு கிடைத்த வெற்றியல்ல என்றும் அவர் சொன்னார்.
வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதனை வாக்களிப்பிற்கு தகுதியான 192 நாடுகளில் எமக்கு வாக்களித்த 101 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த தெரிவு 2011 ஆம் ஆண்டுவரை செல்லுபடியானதாகும் இலங்கையை பொறுத்தமட்டில் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தமை மட்டுமல்லாது சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பாரிய அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இந்த தேர்தலில் நாம் போட்டியிட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெற்றவாக்குகளுக்கு அண்ணளவான வாக்குகளை பெற்றுக்கொணடோம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக்கு இலங்கை தெரிவுசெய்யப்படாத போதிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மற்றும் அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் ஆசிய நாடுகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நான்கு ஆசனங்களுக்காக ஜப்பான், பஹ்ரெய்ன்,தென்கொரியா, கிழக்கு திமோர், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 நாடுகள் போட்டியிட்டன இந்த தேர்தலில் இலங்கை 101 வாக்குகளை பெற்று ஐந்தாம் இடத்தை பெற்றுக்கொண்டது எம்மையும் தெரிவுசெய்வதற்காக வாக்களித்த நாடுகளுக்கு அரசாங்கம் நன்றியை தெரிவித்து கொள்கின்றது.