இலங்கையின் மிக மோசமான இனவாத கட்சி ஜே.வி.பி.யே என நீதியமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கிழக்குத் தேர்தல்களின் போது சிங்களத் தேசியவாத கொள்கைகளை தமது பிரசார உத்தியாக ஜே.வி.பி. பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி.யின் இனவாத சூழ்ச்சியில் சிக்காது தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என அவர் கேரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை ஜே.வி.பி.யின் அனைத்து இனவாத கொள்கைகளும் விமல் வீரவன்சவினால் மேற்கொள்ளப்பட்டதாக தற்போது ஜே.வி.பி.யினர் தங்களை தூய்மைப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக நீதியமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகள் குறித்து நீதியமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2008ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி ஜே.வி.பி.யினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் கிழக்குத் தேர்தல்கள் இனவாதத்தின் மற்றுமொரு பரிணாமம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிழக்குத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட தினம் முதல் ஜே.வி.பி. உள்ளிட்ட சில குழுக்கள் இனவாதத்தை வித்திட்டு அதன் மூலம் நன்மையடைய பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டனர். எனினும் இனவாத கொள்கைகளை கிழக்கு மக்கள் புறக்கணித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்குத் தேர்தல்களின் போது இனவாதக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் ஜே.வி.பி. தனது கடந்த காலத்தை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது இனங்களுக்கு இடையே சகோதரத்துவத்தை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ஆழிப்பேரலை நிவாரணத் திட்டத்தை ஜே.வி.பி. வலிந்து சீர்குலைத்திருந்தமை எல்லோருக்கும் நினைவிருக்கும். ஜே.வி.பி.யின் செயற்பாடுகளை இனவாதம் என்று சொல்வதைவிட கோத்திரவாதம் என்று குறிப்பிடுவதே சாலச் சிறந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி.யினரே 1987ம் ஆண்டு இலங்கையின் கறைபடிந்த அத்தியாத்தின் சொந்தக்காரர்கள் எனவும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அடிப்படை இனவாத கட்சிகள் உருப்பெறுவதற்கு வித்திட்டவர்கள் ஜே.வி.பி.யினரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யினர் அடிக்கடி மக்கள் மத்தியில் இரண்டு வகையிலான பீதியை உருவாக்கி வருகின்றனர். ஒன்று இந்திய ஆக்கிரமிப்பு மற்றையது தமிழீழ விடுதலைப் புலிகள் சாரா ஏனைய அனைத்து பொதுமக்களையும் பயங்கரவாத கண்ணோட்டத்தில் நோக்குவது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பங்களிப்பு பற்றி கூக்குரலிடும் ஜே.வி.பியினரை அரசியல் ஞான சூன்யங்கள் என்று குறிப்பிட்டால் அது பிழையாகாது என நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.