தமிழகத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் அயல்நாட்டவர் அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் வீடுகளை வாங்க அனுமதிக்க வேண்டும், மற்றும் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் (யு.என்.எச்.சி.ஆர்.) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை மெமோரியல் மண்டபம் எதிரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்கக் கூடாது என அண்மையில் முதல்வர் அறிவித்தார். இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். காரணம் சில பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு மணித்தியாலமும் நிலத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இது போன்ற செயற்கையான விலை ஏற்றத்தால் சாதாரண மக்கள் நிலம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் குடியிருக்கும் நோக்கில் அல்லாமல் வியாபார நோக்கில் அதிக நிலங்களை வாங்கி குவிக்கின்றனர். பின்னர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நல்ல விலையில் விற்றுவிடுகின்றனர். எனவே, வியாபார அடிப்படையில் நிலங்கள் வாங்குவதை தடை செய்ய வேண்டும்.
இதற்கு பதிலாக குத்தகை அடிப்படையில் நிலங்களை வழங்கலாம். அரசின் அறிவிப்பை பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் அகதிகள் முகாமில் கியூ பிரிவு பொலிஸார் சோதனை செய்து அவர்களை துன்புறுத்தி வருகின்றனர். இது அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது.
தமிழ் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் ஈழத்தமிழர்கள் எப்படி அயல்நாட்டவர்கள் ஆக முடியும்? முன்பெ ல்லாம் 5 ஆண்டுகள் ஒருவர் இந்தியாவில் வசித்தால் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இப்போது அது நடைமுறையில் இல்லை. 3 தலைமுறையாக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இங்கு நிலம் வாங்கி குடியிருக்க அனுமதி வழங்க வேண்டும்.