இலங்கைக் கடற்படை விதைத்துள்ள"கடற்கண்ணிகள்" விவகாரம் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாக்குநீரிணைப் பகுதியில் கடற்கண்ணிகள் விதைக்கப்பட்டுள்ளமையால் இந்திய மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத இக்கட்டு நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.பாக்கு நீரிணையில் கடற் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டமை சர்வதேச ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசு கடற்கண்ணிகளை விதைத்தன் மூலம் சகல சர்வதேச விதிமுறைகளையும் மீறியுள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், இந்திய அரசு இந்த விடயத்தில் எதனையும் செய்யாமலுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய மீனவர்கள் கடலிற்குச் சென்று மீன்பிடிக்க முடியாத நிலையிலுள்ளனர். அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதற்றமான சூழலில் இந்திய அரசு அவசரமாகத் தலையிட வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார்.சேது சமுத்திரத் திட்டத்தை மத விவகாரமாக மாற்றியுள்ளதாக பாரதீய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டியுள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லையெனவும் குறை கூறினர்.
சேது சமுத்திரத் திட்டத்திற்கு இது வரை எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. எவ்வளவு செலவு செய்யத் திட்டமிடப்பட்டள்ளது என்பவை குறித்த விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டுமெனவும் அவர் கேட்டுகொண்டார்.