சோனியா காந்தியை விமர்சித்தது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, கேரள காங்கிரஸ் கட்சியின் இலக்கிய விருதைப் பெற, பிரபல மலையாள எழுத்தாளர் சுகுமார் அழிக்கோடு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் இதழில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், தம்மை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், 50 ஆயிரம் ரூபாய்க்காக தனது தன்மானத்தை விற்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், கேரள காங்கிரஸ்சின் கலாச்சார அமைப்பான 'சம்ஸ்கரசாஹிதி'யின் இலக்கிய விருது, சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சுகுமார் அழிக்கோடுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுகுமாரை கடுமையாக சாடும் வகையில் கேரளாவில் வெளியாகும் காங்கிரஸ் கட்சியின் இதழான 'வீக்சனத்தில்' கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், 'கேரளாவில் நடந்து வரும் இடதுசாரிகளின் ஆட்சி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறிய கருத்தை, பிரபல நாளிதழ் ஒன்றின் வாயிலாக சுகுமார் அழிக்கோடு கடுமையாக விமர்சித்துள்ளார். காலத்துக்கு ஏற்றாற்போல் தனது நிலையை மாற்றிக்கொள்ளும் அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பினராயி விஜயனுக்கு பணத்துக்காக எழுதுபவர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்தே, காங்கிரஸ் கட்சியின் இலக்கிய விருதினை வாங்குவதற்கு அழிக்கோடு மறுத்துள்ளார்.