அமெரிக்க வெளியுறவு இணைச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது, 123 அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்காவின் இணைச் செயலராக பொறுப்பேற்றுள்ள பவுச்சர் தனது இரண்டு நாள் பயணத்தின்போது, இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலர் காயத்ரி குமாரைச் சந்தித்துப் பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து, வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனை அவர் சந்தித்துப் பேசுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அடிப்படையாக அமையும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடனான ஒப்பந்தம் தொடர்பான இந்தியாவின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து அவர் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடனான 5-வது சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த வியாழன்று வியன்னாவில் முடிவடைந்துள்ள நிலையில், இந்தக் கண்காணிப்பு ஒப்பந்தம் இறுதி செய்யும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜார்ஜ் புஷ்சின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், ரிச்சர்ட் பவுச்சரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தப் பயணத்தின்போது, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஏனைய அண்டைநாடுகளில் நிலவி வரும் சூழல் குறித்தும் இரு தரப்பிலும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.