ரெயில்வே மற்றும் பொது பட்ஜெட்களில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், அதை பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அக்டோபர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
சலுகைகள்
பாராளுமன்றத்தில் கடந்த 26-ந் தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டது. சரக்கு கட்டணமும் குறைக்கப்பட்டது. பல்வேறு புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டன. இத்தகைய சலுகைகளால், இது தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்தன.
அதையடுத்து, கடந்த 29-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. வருமானவரி சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதனால், இந்த பட்ஜெட்டையும் தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன.
இந்த சலுகை அறிவிப்புகளை ஓட்டுகளாக மாற்ற, ஆளும் காங்கிரஸ் கட்சி இந்த ஆண்டிலேயே பாராளுமன்ற தேர்தலை நடத்த விரும்பும் என்றும் எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எதிர்க்கட்சிகளின் எண்ணத்தை உறுதிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
அக்டோபரில் தேர்தல்
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு மே மாதம்வரை உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தினால், இந்த பட்ஜெட் சலுகைகளை வாக்காளர்கள் மறந்து விடுவார்கள் என்று காங்கிரஸ் கருதுகிறது. இந்த சலுகைகள் 6 மாத காலத்துக்கு மட்டுமே செல்வாக்கை தக்க வைக்க உதவும் என்று அக்கட்சி கருதுகிறது. எனவே, சூட்டோடு சூடாக பாராளுமன்ற தேர்தலை நடத்த விரும்புகிறது.
அதற்கு வசதியாக, இந்த ஆண்டு இறுதியில் 7 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட 7 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதால், இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும்.
அவற்றுடன் சேர்த்து வருகிற அக்டோபர் மாதத்திலேயே பாராளுமன்றத்துக்கும் தேர்தலை நடத்தி விட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்படிச் செய்தால், இந்த சலுகைகளை பயன்படுத்தி, மத்தியிலும், 7 மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டுள்ளது.
காரிய கமிட்டி
இதை உணர்த்தும் வகையில், இந்த ஒட்டு மொத்த சலுகைகளும் சோனியா காந்தியால்தான் கிடைத்தது என்று முன்னிலைப்படுத்தி காட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சற்று நேரத்தில், சோனியா காந்தி வீடு முன்பு விவசாயிகள் பெருமளவில் திரண்டு சோனியாவுக்கு நன்றி தெரிவித்தனர். `வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது` என்று பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அதில், சோனியா, மன்மோகன்சிங் படங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து விவாதிக்க விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை சோனியா கூட்டுகிறார். அத்துடன், காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தையும் கூட்டுகிறார். அதில், `தேர்தலுக்கு தயார் ஆகுங்கள்` என்று காங்கிரசாருக்கு சோனியா பகிரங்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்
மேலும், விவசாய கடன் ரத்து அறிவிப்புக்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 9-ந் தேதி டெல்லி ராமலீலா மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அதில் மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அண்டை மாநிலங்களில் இருந்தெல்லாம் ஏராளமான விவசாயிகள் இந்த பொதுக்கூட்டத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
விவசாய கடன் ரத்து அறிவிப்புக்கான ஒட்டுமொத்த நற்பெயரும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே கிட்ட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. எனவே, இந்த பொதுக்கூட்டத்துக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதுபோல், நாட்டின் மற்ற பகுதிகளிலும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அத்தகைய கூட்டங்களில் சோனியா, ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
மாநில தலைமைக்கு உத்தரவு
விவசாய கடன் அறிவிப்பு செய்தி, ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. எனவே, கிராமங்களுக்கு சென்று விவசாய கடன் ரத்து செய்தியை விவசாயிகளிடையே பிரசாரம் செய்யுமாறு மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பட்ஜெட்டில் உள்ள சலுகை அறிவிப்புகளை ஒவ்வொரு மாநில மொழியிலும் தனித்தனி புத்தகங்களாக அச்சிட்டு, வாக்காளர்களிடையே வினியோகிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
`காங்கிரஸ் அரசு, ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் பாடுபடும் அரசு` என்ற எண்ணம், வாக்காளர்களிடையே ஏற்பட எல்லாவகையிலும் காங்கிரஸ் கட்சி பாடுபட்டு வருகிறது. 6 மாத காலத்துக்குள் இந்த பணிகளை முடித்து, தேர்தலில் அதற்கான பலனை அடைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி காய் நகர்த்தி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர், மே 9-ந் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபடும்.
அதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தை கலைக்க சிபாரிசு செய்யும். அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த வழி வகுக்கும் என்று டெல்லி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இடதுசாரிகள் கருத்து
அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சி முன்கூட்டியே தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்காது என்று இடதுசாரி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அப்படியே, திடீர் தேர்தல் நடத்தினாலும், காங்கிரஸ் கட்சிக்கு பெரிதாக பலன் கிடைக்காது என்றும் அக்கட்சிகள் கூறியுள்ளன.
இதுபோல், கூட்டணிக் கட்சி தலைவரான சரத் பவாரும், திடீர் தேர்தல் நடத்த தேவை இல்லை என்று கூறியுள்ளார்.