தமிழ்நாட்டில் கட்சியை வலுப் படுத்தவும், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3வது அணியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
இதற்காக புதிதாக வளர்ந்து வரும் கட்சிகள் உட்பட அதிமுக, பிஜேபி தவிர்த்த கட்சிகளுடன் பேச்சு நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதும், அவ்வப்போது சமரசம் ஏற்படுவதுமாக இருந்து வருகிறது.
குறிப்பாக திமுக அரசை,மணல் கொள்ளை, மது ஒழிப்பு, ரேஷன் அரிசி கடத்தல், தொழிற்சாலைகளுக்கு நில ஆர்ஜிதம் செய்தல் போன்ற பிரச்சனைகளில் திமுகவின் செயல்பாடுகளை பகிரங்கமாகவே பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் குறை கூறிவருகிறார்.
இதேபோல, விடுதலைப்புலிகள் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே கடும் விமர்சனம் ஏற்பட்டது. தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை ஒடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக மத்திய அமைச்சர்கள் சிதம்பரமும், இளங்கோவனும் வெளிப்படை யாகவே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்கள். இதனால், கடும் ஆத்திரமடைந்த முதலமைச்சர் கருணாநிதி, ஆட்சி மாற்றத்திற்கும் தயார் என்று அறிவித்தார்.
சேது சமுத்திர திட்ட விவகாரத் திலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குதல், நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை வழங்குதல் ஆகிய திட்டங்களில் தமிழக அரசு விரைவான நடவடிக் கைகளை மேற்கொள்ளவில்லை என்று இடதுசாரிகளும் திமுக அரசு மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
இதுபோன்று, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டு வரும் பூசல்களால் இந்த கூட்டணி தொடர்ந்து நிலைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆயினும், அவ்வப்போது உரசல் களை தணித்துக் கொள்ளும் வகை யில் சமரச முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மையில் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்; அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மேலிட பிரதிநிதி வீரப்ப மொய்லியும் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்தார். கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று அவர் கூறினார்.
எனினும், திமுக கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல் தொடர்ந்து நீடித்து வருவதாகவே கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான அருண்குமார் எம்.பி. இதுவரை கூட்டணியின் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியை மரியாதை நிமித்தமாகக்கூட வந்து சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ்நாட்டில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்றாக தங்களது தலைமையில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
ரெயில்வே பட்ஜெட், மத்திய பொது பட்ஜெட்டில் விவசாயிகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், பெண் களுக்கும் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளின் பலனை முழுமையாக அறுவடை செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதை பயன்படுத்தி மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவதுடன், மாநில அரசில் காங்கிரசை இடம் பெற செய்யும் வகையிலும், 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபடு வதற்கு இதுவே சரியான தருணம் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக தெரிகிறது.
எனவே, திமுக, அதிமுகவுக்கும் மாற்றாக புதிய அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சி, பிஜேபி அல்லாத புதிதாக வளர்ந்து வரும் கட்சிகளுடனும், திமுக அணியில் இடம் பெற்றுள்ள சில கட்சி களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய 3வது அணியின் தலைமையில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் எதிராக விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது எனவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக 40 ஆண்டு களுக்கு முன்பு திராவிடக்கட்சி களிடம் பறிக்கொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு, அதற்காக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.