ராமர் பாலம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்ப்புக்கு நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நாடக்கூடாது என பா.ஜனதா கூறியுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வி.கே. மல்ஹோத்ரா, இது தொடர்பாக கூறியதாவது :
ராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனு ஆட்சேகரமானது மட்டுமல்ல ; தங்களுக்கு ஏற்கத்தக்கதும் அல்ல என பா.ஜனதா கூறியுள்ளது.
ராமர் பாலம் பிரச்சனை மக்களின் நம்பிக்கை தொடர்பானது என்பதால் அப்பிரச்சனையை அரசே தீர்க்க வேண்டும்.இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்பை நாடுவது தவறானது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற 6 வது வழிப்பாதையை பரிசீலிக்க அரசு ஏன் தயங்குகிறது ? அந்த பாதை ராமர் பாலத்திற்கு தடையாக இல்லை.
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தும்போது லட்சக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய ராமர் பாலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்.
மேலும் இப்பிரச்சனை மதம் மற்றும் நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பதால், அப்பிரச்சனைக்கு அதுவே (அரசே) தீர்வுகாணும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமர் பாலம் என்பது மனிதனால் கட்டப்பட்டதல்ல, அது இயற்கையாக உருவானது என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.