ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதிகளை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சியின் கோரிக்கை ஆகும்.
இந்த கோரிக்கையை முன்வைத்தே, கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.
மந்திரி பதவி ராஜினாமா
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தபோது உருவாக்கிய குறைந்தபட்ச செயல் திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைக்க உறுதி கூறப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படவில்லை. எனவே, சில மாதங்களுக்கு முன் மத்திய அரசில் இருந்து தெலுங்கானா கட்சி தலைவர் சந்திர சேகர ராவ் உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.
மக்களவையில் கோஷம்
அதன் பிறகும், தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எந்த வித நடவடிக்கையையும் காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை. ஜனாதிபதி உரையிலும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதையடுத்து மார்ச் 3-ந் தேதிக்குள் (நேற்று) தெலுங்கானா குறித்த அறிவிப்பு வெளியாக விட்டால் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று காலையில் மக்களவை கூடியது. அப்போது, தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்களும் எழுந்து நின்று தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, `ஜெய் தெலுங்கானா' என்று கோஷம் எழுப்பினர்.
எம்.பி. பதவி ராஜினாமா
கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பேசும்போது, `நான்கு ஆண்டுகளுக்கு முன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது, எங்களுடைய தனி தெலுங்கானா கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தது. ஆனால், தெலுங்கானா பகுதி மக்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது' என்றார்.
இதனைத் தொடர்ந்து, அந்த கட்சியின் எம்.பி.க்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்றனர். கட்சி தலைவர் சந்திர சேகர ராவ் மற்றும் வினோத் குமார், தரவத் ரவிந்தர் நாயக், மதுசூதன் ரெட்டி ஆகிய 4 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். பின்னர் அனைவரும் அவையை விட்டு வெளியேறினர்.
சபாநாயகர் அறிவிப்பு
ராஜினாமா குறித்து சபாநாயகர் கூறுகையில், `மக்களவையில் இருந்து உறுப்பினர்கள் ராஜினாமா செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை பின்பற்றி, இந்த கடிதங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்தார்.
கடும் அமளி
இதன் பிறகு, எதிர்க்கட்சி தலைவர் எல்.கே.அத்வானி பேசும்போது, `பாராளுமன்றத்திலேயே ராஜினாமா கடிதங்களை கொடுப்பது இதுவே முதல் முறை ஆகும். ஜனாதிபதியின் உரையில் கூட தெலுங்கானா மாநிலம் குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உத்தரகாண்ட், சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஆகிய புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன' என்றார்.
இதையடுத்து, அத்வானி பேச்சுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரும் கோஷம் எழுப்பினர். இதனால், கடும் அமளி ஏற்பட்டது. அத்வானி பேசுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் அடையாள வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் அவைக்கு திரும்பி வந்தனர்.
காங்கிரஸ் ஒரு வில்லன்
பதவியை ராஜினாமா செய்த பிறகு பேட்டியளித்த சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியாவை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் கால தாமதம் ஏற்படுவதற்கு சோனியாவே காரணம். கடந்த தேர்தலின்போது, இளஞ்சிவப்பு நிற சால்வையை அணிந்து கொண்டு தெலுங்கானா வரைபடத்தையும் கையில் வைத்தபடி `ஜெய் தெலுங்கானா' என்று சோனியாவும், அவரது வேட்பாளர்களும் கோஷம் எழுப்பினார்கள்.
தற்போது, தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் கட்சி நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் முதலாவது வில்லன். வரும் தேர்தலில் அந்த கட்சி மண்ணை கவ்வும். மத்தியிலும், ஆந்திராவிலும் ஆட்சியை இழக்கும்.
கூட்டணியை காப்பாற்றுவதற்காக கப்பல் போக்குவரத்து துறையை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்து விட்டு இலாகா இல்லாத மந்திரியாக 7 மாதங்கள் இருந்தேன். ஆனால், தெலுங்கானா கட்சிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ன கைமாறு செய்தது?
மொழிவாரி மாநிலங்கள்
தெலுங்கானா பிரச்சினைக்காக ஏராளமானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இது மிகவும் முக்கியமான கோரிக்கை. தனி மாநிலம் அமைப்பது குறித்து பிரணாப் முகர்ஜி கமிட்டியிடம் பல்வேறு கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் என்ற ஒரே ஒரு கட்சி மட்டும்தான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மொழி அடிப்படையில்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். அப்படி பார்த்தால், எந்த அடிப்படையில் ஏழு இந்தி பேசும் மாநிலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. தெலுங்கானா பிரச்சினையில் எங்களுக்கு ஆதரவு அளித்த அத்தனை கட்சிகளுக்கும் எங்களது நன்றி. எனினும் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது எதுவும் கூற முடியாது.
இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
எம்.எல்.ஏ. பதவி
தெலுங்கானா கட்சிக்கு ஆந்திர சட்டசபையில் 16 எம்.எல்.ஏ.க்களும், மூன்று மேல்சபை உறுப்பினர்களும் உள்ளனர். தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் அனைவரும் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.