வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் வட மாவட்டங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மத்திய நிதி அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட காரைக்குடி பகுதிக்கு கூட போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. மயிலாடுதுறை-திருவாரூர்- காரைக்குடி இடையே ரயில் பாதை அமைக்க பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முழுப் பணியும் முடிவடைய 344 கோடி ரூபாய் தேவை. இதனால் இத்திட்டம் வரும் 2010ம் ஆண்டில் கூட முடிவடையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 903 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. புதிய ரயில் பாதைக்கு 51 கோடி ரூபாயும், மீட்டர்கேஜ் பாதைகளை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிக்கு 475 கோடி ரூபாயும், இரட்டை ரயில் பாதைக்கு 231 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் - காட்பாடி இடையே 161 கி.மீ., அகல ரயில் பாதை திட்டத்திற்கு 276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்த பட் ஜெட்டில் 121 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்-பாலக்காடு- பொள்ளாச்சி- கோவை இடையே 224 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்க 613.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி - நாகூர் - காரைக்கால் இடையே 200 கி.மீ., தூரம் அகலப்பாதை அமைக்க 447.34 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டு திருவாரூர் வரை பணி முடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் - நாகூர் இடையே பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு கடந்த ஆண்டு 281 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்துடன் நாகூர் - காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் -வேளாங் கண்ணி, முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை - திருத்துறைப்பூண்டி வரை புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. மொத்தத்தில் இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
திருச்சி - மானாமதுரை இடையே 150 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் காரைக்குடி வரை ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. காரைக்குடி - மானாமதுரை பணி நடந்து வருகிறது. இதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மானாமதுரை - விருதுநகர் இடையே 66 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்க 148 கோடி ரூபாய் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் முடிவடைய 83 கோடி ரூபாய் வேண்டும்.
மயிலாடுதுறை- திருவாரூர்-காரைக்குடி இடையே 224 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்க 404.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள் ளது. இதற்கு கடந்த ஆண்டு 10 கோடி ரூபாயும், இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இத்திட்டம் முடிக்கப்பட 344.19 கோடி ரூபாய் தேவை. இத்திட்டம் 2010ம் ஆண்டில் கூட முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே 192 கி.மீ., அகல ரயில் பாதை அமைக்க 372 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கு கடந்த ஆண்டு 340 கோடி ரூபாயும், இந்த ஆண்டு 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே பணி நடந்து வருகிறது.இத்திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் கொள்ளிடம் பாலம் அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடந்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் போக்குவரத்து துவங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நெல்லை - தென்காசி இடையே உள்ள மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றவும், மதுரை - போடி மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.அடுத்த நிதி ஆண்டுக்குள்ளாவது தமிழகத்தில் மீட்டர்கேஜ் பாதைகள் ஒழிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.
கோவை - திண்டுக்கல் அகல பாதை பணி எப்போது முடிவடையும்? :கோவை - திண்டுக்கல் ரயில்வே பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு 2006ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் 224.88 கி.மீ., தூரத்திற்கு பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு தயாரிப்புக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அடுத்து 2007ம் ஆண்டு பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் இப்பகுதிகளில் அகல ரயில்பாதை பணிகள் துவங்கியதற்கான அறிகுறிகள் இல்லை.இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டிலாவது முழுமையான அளவு நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், நடப்பாண்டு ரயில்வே பட்ஜெட்டில் திண்டுக் கல்- பொள்ளாச்சி- பாலக்காடு, பொள்ளாச்சி-கோவை அகல ரயில்பாதை திட்டத்திற்கு 613.61 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடாக குறிப்பிடப்பட்டு, அதில், 65 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; திட்டமதிப்பீடு 38.15 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 31 கோடி ரூபாயில் இதுவரை ஏழு கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியில், திட்டமதிப்பீடு, அலுவலகம், டெண்டர் ஆகிய பணிகள் மட்டுமே நடந்துள்ளது.இந்நிலையில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள குறைந்த அளவு தொகையில் ஓரிரு பாலங்கள் மற்றும் நிர்வாக செலவினங்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.இதனால், கோவை-திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டப் பணிகள் முடிவடையுமா என சந்தேகம் எழுந்துள்ளது
பயன் பெறும் வட மாவட்டங்கள் :சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கடலூருக்கு புதிய ரயில் பாதை, விழுப்புரம் - காட்பாடி இடையே ரயில் பாதை, சென்னை விழுப்புரம் இடையே இரட்டை ரயில்பாதை என எல்லாமே வட மாவட்ட திட்டங்கள். தென் மாவட்ட திட்டங்கள் பல அறிவிப்போடு நிற்கின்றன. பணம் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. வழக்கம்போல் தென் மாவட்ட எம்.பி.,க்கள் மவுனம் காப்பதே இதற்கு காரணம்.