சென்னையில் வங்கி ஏ.டி.எம் சென்டரில் கதவு திறக்காமல், 4 மணி நேரம் மாட்டிக் கொண்ட வாலிபரை தீயணைக்கும் படையினர் வந்து மீட்டனர்.
பணம் எடுக்க
சென்னை சைதாப்பேட்டை, ஜோதி அம்மன் நகரில் வசிப்பவர் விஜய் ஆனந்த். இவர் கனரா வங்கி ஏ.டி.எம் கார்டு வைத்துள்ளார். நேற்று காலையில் இவர் சைதாப்பேட்டை பனகல் பில்டிங் அருகே உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். கிளையில் பணம் எடுக்க சென்றார். கதவை பூட்டிக்கொண்டு ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் துண்டித்து விட்டது.
இதனால் ஏ.டி.எம் மையத்தின் கதவு திறக்கவில்லை. பணம் எடுத்துக் கொண்டு வெளியே வர முயன்ற விஜய் ஆனந்தால் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர் தவித்துப் போனார். மீண்டும் மின்சாரம் வரும், கதவு திறக்கும் வெளியே வந்து விடலாம் என்று அவர் காத்திருந்து பார்த்தார். ஆனால் மின்சாரம் வராததால் கதவு திறக்கவில்லை.
4 மணி நேரம் தவிப்பு
4 மணி நேரமாகியும் மின்சாரம் வந்து விஜய் ஆனந்தின் தவிப்பை தணித்து வெளியே வர உதவி செய்யவில்லை. வேறு வழி இல்லாமல் விஜய் ஆனந்த் செல்போன் மூலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து கதவை உடைத்து, விஜய் ஆனந்தை வெளியே மீட்டனர். அதன் பிறகுதான் பதட்டம் தணிந்தது.
மின்சாரம் துண்டிப்பால் ஏ.டி.எம் கதவு திறக்கப்படாமல் வாலிபர் மாட்டிய சம்பவம், சென்னை நகரில் முதல், முதலாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.