ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முயல்தீவு கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 67 மூட்டை பேட்டரிகள் மற்றும் நாட்டுப் படகை, திங்கள்கிழமை இந்திய கடலோரக் காவல் படையினர் கைப்பற்றி, மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலோரப் பகுதியில் இருந்து பீடி பண்டல்கள், அத்தியாவசியப் பொருள்கள், வெடி மருந்துகள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் இலங்கைக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தடுப்பதற்கு, அனைத்துக் கடலோரப் பகுதியிலும் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் ரோந்துப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில், ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 67 மூட்டை பேட்டரிகள் இலங்கைக்குக் கடத்தப்பட இருப்பதாக, மண்டபம் கடலோரக் காவல் படை கமாண்டர் ஜனார்த்தனனுக்கு, எஸ்.பி. தனிப் பிரிவு போலீஸôரிடம் இருந்து தகவல் வந்தது.
இதையடுத்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவல் படை வீரர்கள், ஹோவர்கிராப்ட் கப்பலில் முயல் தீவு கடற்கரைப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு கேட்பாரற்று நின்றிருந்த நாட்டுப் படகைச் சோதனை செய்தனர். அதில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 67 மூட்டை பேட்டரிகளைக் கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்து, படகையும் மண்டபம் முகாமுக்குக் கொண்டு வந்தனர்.
பின்னர், அவற்றை மண்டபம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புராஜிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, மண்டபம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் கரீம் என்பவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.