ராஜ்யசபை தேர்தலில் பாமகவுக்கு சீட் இல்லை என்று முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில், வருகிற 15 ம் தேதிக்குள் திமுக தனது முடிவை அறிவிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கெடு விதித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபை உறுப்பினர்களாக உள்ள 6 பேரின் பதவிக் காலம் அடுத்த மாதம் 2ம் தேதி முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் இம்மாதம் 26 ம் தேதி நடைபெறுகிறது.
திமுக சார்பில் 4 இடம் பெறுவது உறுதி. திமுகவில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒருமித்த ஆதரவு வழங்கும் நிலையில் மேலும் ஒரு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தங்களது கட்சிக்கு ஒரு சீட் தரும்படி திமுகவிடம் பாமக வற்புறுத்தி வருகிறது.இதுதொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்ட முதலமைச்சர் கருணாநிதி, பாமக சீட் கேட்பது நியாயமல்ல என்று கூறியதோடு, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 2 இடமும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.
இதனால் இவ்விவகாரத்தில் திமுக-பாமக இடையே மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாமகவின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் இன்று, தி.நகர் பென்ஸ் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.இதில் பாமக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் நடத்திய தீவிர ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது :
ராஜ்யசபை தேர்தலில் பாமகவுக்கு ஒரு சீட் தருவது தொடர்பாக திமுக தலைமையுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மார்ச் 15ம் தேதி வரை இந்த பேச்சுவார்த்தைகளை தொடர முடிவு செய்துள்ளோம்.
மார்ச் 15 ம் தேதிக்குள் திமுக தனது முடிவை அறிவிக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் 15 ம் தேதி மறுபடியும் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பாமகவின் இறுதி முடிவை அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.