விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவு தொடரும் என தொல். திருமாவளவன் கூறினார். உடுமலையை அடுத்துள்ள சாளரப்பட்டி கிராமத்தில் அருந்ததியினர்
மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உடுமலை வந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் திருமுறைகளை பாடிய சிவ பக்தர் ஆறுமுகசாமி உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். தீட்டுப் பட்டு விட்டதாகக் கூறப்பட்ட கோவிலின் வடக்கு வாசலை உடனே திறக்க வேண்டும்.
மாநிலங்களவைக்கான தேர்தலில் தாழ்த்தப்பட்டோரும் இடம்பெறும் வகையில் அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைத்து வாய்ப்பளிக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பிரதிநிதித்துவம் அளித்தால் மகிழ்ச்சி அடைவோம். தமிழ் ஈழ விடுதலைக்காக போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்து தார்மீக ஆதரவு கொடுப்போம். இதில் தவறு இல்லை என்றார்.