தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல் - சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல், வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு, வருகிற 15-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
சென்னை, மார்ச்.8-
தமிழ்நாட்டை சேர்ந்த டெல்லி மேல்-சபை எம்.பி.க்கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.
அந்த காலியிடங்களுக்கு புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.
இன்று வேட்பு மனு
தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு புதிய எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 15-ந் தேதியாகும்.
17-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 19-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஓட்டுப்பதிவு நாள் 26-ந் தேதி. தேர்தலில் போட்டி இருந்தால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். 29-ந் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும்.
தேர்தல் அதிகாரி
தேர்தல் அதிகாரியாக தமிழக சட்ட மன்ற செயலாளர் எம்.செல்வராஜை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. சட்டசபை துணை செயலாளர் உதவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
8-ந் தேதி (இன்று) முதல் 15-ந் தேதி வரை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அல்லது உதவி தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். (9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை). தேவைப்பட்டால் 26-ந் தேதி அன்று சட்டமன்ற குழுக்கள் அறையில் தேர்தல் நடைபெறும்.
ஒரு இடத்துக்கு போட்டி
டெல்லி மேல் சபைக்கு ஒரு எம்.பி.யை தேர்வு செய்வதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தி.மு.க. கூட்டணி சார்பில் 4 எம்.பி.க்களையும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஒரு எம்.பி.யையும் எளிதில் தேர்ந்து எடுக்க முடியும். இதனால் ஒரு எம்.பி. பதவிக்கு போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையின் தற்போதைய கட்சி நிலவரப்படி இந்த எம்.பி. பதவியை பெறுவதற்கு தி.மு.க. கூட்டணிக்கு கூடுதலாக 3 எம்.எல்.ஏ.க்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் தேவைப்படுகிறார்கள். எனவே, இந்த தேர்தலில் இழுபறி நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
இடப்பங்கீட்டில் பிரச்சினை
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களை பங்கீடு செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது. பா.ம.க.வுக்கு ஒரு இடம் வேண்டும் என்று அந்த கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து இருந்தார். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதி இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார். இது பற்றி டாக்டர் ராமதாஸ் கூறும்போது, வருகிற 15-ந் தேதி வரை அவகாசம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.