தமிழகத்தில் தி.மு.க. அரசின் புதிய திட்டங்களால் பெண்கள் சமுதாயம் முன்னேறி வருகிறது என்று உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவில் தொடங்கியது
மகளிர் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா இன்று (சனிக்கிழமை) மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் நிïயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாள். பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.
தி.மு.க. அரசுத் திட்டங்கள்
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார், அண்ணா அறிவுறுத்திய சமத்துவ, சமதர்மக் கொள்கைகளின்படி, பெண்கள் சமுதாயம் ஆண்களுக்கு இணையாக முன்னேற்றம் காண்பதற்காக கல்வியறிவு பெற்று, வேலை வாய்ப்புகள் அடைந்து, பொருளாதாரத் தன்னிறைவு பெறவேண்டும் என்பதற்காக தி.மு.க. அரசு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டிடும் வகையில் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, 1973-ம் ஆண்டு போலீஸ் பணியில் மகளிர் நியமனத் திட்டம்; 1989-ல் மகளிர் மேம்பாட்டுத் திட்டம்; 10-ம் வகுப்புவரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989-ல் 5 ஆயிரம் ரூபாயும், 1996-ல் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கி, 2006-ல் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்;
33 சதவீத இடஒதுக்கீடு
1989-ம் ஆண்டு ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; 2007-ல் இத்திட்டம் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு; 1990-ல் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிர்க்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்; அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சமஉரிமை அளித்திடும் தனிச் சட்டம்;
1996-ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்; 2006-ல் இந்த அரசு பொறுப்பு ஏற்ற பின்பு ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது
உளமாற வாழ்த்துகிறேன்
இதன் மூலம் பெண்கள் சமுதாயம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. பெண்கள் மேலும் உயர்வு பெறும் வகையில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்திட மத்திய அரசு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா, தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நிகழ்ந்திடவும், தமிழக மகளிர் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் அடையவும் இந்த நன்னாளில் என் உளமார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு உள்ளது.