இந்திய உணவகங்களை எடுத்து நடத்த இலங்கையின் முன்னணி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 4 ஹோட்டல்களையும், 4 கோடை வாசஸ்தலங்களையும் நிர்வகிக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
ஹோட்டல் தொழிலில் முன்னணியில் உள்ள இலங்கையின் அய்ட்கின் ஸ்பென்ஸ் நிறுவனம், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நட்சத்திர ஹோட்டல்களை நிர்வகிக்க முடிவு செய்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக, இந்தியாவில் 4 ஹோட்டல்களை எடுத்து நடத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஹோட்டல்கள் அனைத்தும், தலைநகர் தில்லியைச் சுற்றி அமையவுள்ளன.
இதைத் தவிர, மதுரை, கொச்சி, திருவனந்தபுரம், அந்தமான் தீவு ஆகிய இடங்களில் தலா ஒரு கோடை வாசஸ்தலத்தை நிர்வகிக்கவும் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய அய்ட்கின் ஸ்பென்ஸ் நிறுவன தலைமை அதிகாரி மாலின் ஹப்புகோடா, இந்திய நட்சத்திர ஹோட்டல்களில், அறை வாடகை நம்பமுடியாத அளவில் அதிகரித்துள்ளதே இந்நடவடிக்கைக்கு காரணம் என தெரிவித்தார்.