டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நேற்று கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதில் 10 கம்ïனிஸ்டு தொண்டர்கள் காயம் அடைந்தனர். பிரகாஷ் கரத், சீதாராம் யெச்சூரி ஆகிய மூத்த தலைவர்களின் கார்கள் சேதம் அடைந்தன.
கேரளா கலவரம்
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலைசேரியில் கடந்த 5-ந் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கு இடையே கலவரம் மூண்டுள்ளது.
இந்த கலவரம் காரணமாக நேற்று வரை 7 பேர் கொல்லப்பட்டனர். கேரளா கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகம் முன்பாக ஆர்.எஸ்.எஸ். சார்பாக நேற்று முன்தினம் தர்ணா நடைபெற்றது.
எனினும் போலீசார் வந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இந்த சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம், தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
தரைதளம் சேதம்
கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது, ஏராளமான ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் பேரணியாக வந்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, தலைமை அலுவலகத்தில் நின்று கொண்டு இருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கும் அவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனே, மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகம் மீது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கல் வீசி தாக்கினர்.
மேலும் அங்கிருந்த ஜன்னல்கள், கதவுகளை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் கட்சியின் தரை தளம் கடுமையாக சேதம் அடைந்தது. மேலும் அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதில், சீதாராம் யெச்சூரி மற்றும் பிரகாஷ் கரத் கார்களும் இருந்தன.
கூட்டம் ரத்து
இந்த தாக்குதலில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் 10 பேர் காயம் அடைந்தனர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் 15 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டெல்லி அதிரடி விரைவு போலீசார் விரைந்து வந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்து மகாசபை அமைப்பை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் யார் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கலவரம் ஓய்ந்த பிறகு, அதன் பிறகு, கட்சியின் `பொலிட் பீரோ' உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.