தமிழ்நாட்டு மீனவர்களைவிட இலங்கை அரசின் உறவு பெரிதாக போய்விட்டதா? என தினமணி ஆசிரியர் தலையங்கத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
"மாறட்டும் அணுகுமுறை' என்ற தலைப்பில் நேற்று வெளியான தினமணி ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கச்சதீவு அருகே இம்மாதம் 5ஆம் திகதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதையும் அதில் கிறிஸ்டி என்பவர் இறந்ததையும் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
இந்தியாவின் மேற்கில்தான் நிரந்தர வைரியான பாகிஸ்தான் இருக்கிறது. குஜராத் மாநில மீனவர்கள்தான் அடிக்கடி கடலில் எல்லை எது என்று தெரியாமல் பாகிஸ்தான் பகுதிக்குச் சென்று விடுவதால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களைக்கூட பாகிஸ்தான் இப்படி சுட்டு சடலமாகவோ குற்றுயிரும் குலை உயிருமoகவோ அனுப்புவதில்லை.
கடல் எல்லையை மீறுகிறவர்களைக் கைது செய்யவும், தண்டிக்கவும் சர்வதேச சட்டங்களின்படி வழிகள் இருக்கும்போது இலங்கை கடற்படையினர் அல்லது அவர்களுடைய ஆசியைப் பெற்றவர்கள் இப்படி அக்கிரமமாக நடக்கும்போது இந்திய அரசு மெத்தனமாக இருப்பது வேதனையைத் தருகிறது.
சர்வதேச விவகாரங்களில் கூட சட்டப்படியும் நியாயப்படியும் நடந்துகொள்ள நமது அரசு தயங்குவது ஏன்? தமிழ்நாட்டு மீனவர்களை விட இலங்கை அரசின் உறவு பெரிதாகப் போய்விட்டதா? என்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன.நம்முடைய ஆதங்கம் எல்லாம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நாடு. வளர்ந்து வரும் பொருளாதாரப் புலி என்றெல்லாம் நம்மை நாமே பாராட்டிக் கொள்கிறோமே. நம்மை ஒரு நாடாகக் கூட இலங்கை மதித்ததைப் போல் தெரியவில்லையே என்பதுதான்.
தமிழக முதல்வர் நாளொரு கவிதை, பொழுதொரு கடிதம் என்று எழுதி தன்னுடைய பேனா வலிமையைக் காட்டுகிறாரே தவிர, இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்ததற்கான அனுபவ முதிர்ச்சியையும், மத்திய அரசியலில் தனக்கிருக்கும் செல்வாக்கையும், இலங்கை பிரச்சினையில் தமிழினத்துக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் இந்திய அரசின் பார்வையில் தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவத்தையும் பெற்றுத் தருவதில் காட்டுவதில்லையே என்பதுதான் நமது ஆதங்கம்.
இலங்கையை அதட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில்கூட அடக்கியே வாசிக்க நினைப்பது ஏன்? இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை தி.மு.க.வின் அணுகு முறை ஆரம்பம் முதலே தெளிவாக இல்லாமல் இருப்பதுதான் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதில் நியாயமில்லாமல் இல்லை.