தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென் தமிழகத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் தென் மேற்கு பகுதியில், தமிழ்நாடு மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடகிழக்கில் இருந்து கிழக்கு நோக்கி 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராதாபுரத்தில் 5 செ.மீ. மழையும், திருச்செந்தூர் மற்றும் பூதபாண்டியில் 3 செ.மீ. மழையும், சாத்தான்குளத்தில், கன்னியாகுமரியில் மற்றும் மயிலாடியில் 2 செ.மீ. மழையும் செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது.