ராஜ்ய சபை தேர்தல் தொடர்பாக இன்று இரவு முடிவு அறிவிப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் ஆகியவற்றை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். இதை பாமக தலைவர் ஜி.கே.மணி பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் ராமதாஸ் அளித்த பேட்டி: எங்கள் பட்ஜெட்டின்படி, டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். சனி, ஞாயிறு, பண்டிகை நாட்களில் கடைகளை திறக்கக்கூடாது.
மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்குவது தேவையற்றது. அதற்கு பதிலாக வறுமையில் உள்ள குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.
திமுக அரசின் கடந்த 2 பட்ஜெட்டிலும், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட சில விஷயங்கள் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவோ, வேலை வாய்ப்பை பெருக்கவோ எந்த நடவடிக்கையும் இல்லை.
பாமகவின் அவசர நிர்வாகக் குழு கூட்டம் இன்று இரவு நடைபெறுகிறது. இதில் ராஜ்யசபை தேர்தலில் எங்களது நிலை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
பாமகவின் இன்றைய கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னரே, திமுக- பாமக உறவு நீடிக்குமா, இல்லையா என்பது தெரிய வரும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.