ஐதராபாத் மற்றும் பெங்களூர் பழைய விமான நிலையங்களை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் மயமாக்கலை கண்டித்தும் நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று 2-வது நாளாக ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் நீடித்தது.
விமான போக்குவரத்து அதிக அளவு பாதிக்கப்பட வில்லை என்றாலும் விமான பயணிகள் இதனால் பெரு மளவு பாதிக்கப்பட்டனர். கொல்கத்தா உள்நாட்டு விமான நிலையத்திலும், சர்வதேச விமான நிலையத் திலும் விமானங்கள் வழக்கம் போல் வந்து சென்றன.
கொல்கத்தா விமான நிலையம் நேற்று இரவும் இன்று காலையும் இருளில் மூழ்கியது. மின் விளக்கு சுவிட் போட ஊழியர்கள் யாரும் வரவில்லை. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படவில்லை. பயணிகளுக்கு குடிநீர் சப்ளை யும் இல்லை. விமான நிலைய வளாகத்தில் காகித தம்ளர்கள் மற்றும் பைகள் தேங்கி கிடந்தன. மலை போல் குப்பை தேங்கி கிடந்தது. பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
உயர்மட்ட அதிகாரிகள் இன்று அவசரமாக கூடி நிலைமை பற்றி ஆலோசிக்கிறார்கள்.
சென்னையில் விமான போக்குவரத்து பாதிக்கப் படவில்லை. காலை 10 மணி வரை சென்னையில் இருந்து 17 விமானங்கள் டெல்லி, மும்பை உள்பட பல்வேறு இடங்களுக்கு புறப்பட்டு சென்றன.
உள்நாட்டு விமான நிலையத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல் தேங்கி கிடந்தன. விமான நிலையத்தின் முன் ஊழியர்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.