ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க தொடர் முழக்கப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை சென்னையில் தியாகராஜ நகரில் இன்று ராமதாஸ் தலைமையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைப் சிறுத்தைகள் தலைவர்கள் உட்பட தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றியாற்றும் போது மருத்துவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு இலங்கைக்கு ஆயுததளபாட உதவிகளை மற்றும் படைத்துறைப் பயிற்சிகை வழங்குவதை நிறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நியாமான தீர்வு கிடைக்க இந்திய அரசு செயற்படவேண்டும்.
இலங்கை தொடர்பில் இந்திய மத்திய அரசின் அணுமுறைகள் மாற்றமடைய வேண்டும். கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழின அழிப்புக்கு எதிராக போராட வேண்டிய திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அமைதி காப்பது வேதனையளிக்கிறது. இந்த விடயத்தில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருனாநிதிக்கு அதிக பொறுப்பு உண்டு.
தமிழின அழிப்பை கருத்திற்கொண்டு தமிழர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்த தொடர் முழக்கப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதுகுறித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பில் திருமாவளவனுடன் பேசி முடிவு காணப்படும்.
தொடர் முழக்கப் போராட்டத்திற்கான நாட்கள் பின்னர் அறிவிக்கபடும் என மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.