சென்னையில், கொட்டும் மழையில் நடந்த நிகழ்ச்சியில் 600 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.11/2 கோடி சுழல்நிதிஉதவியை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ரூ.11/2 கோடி நிதி உதவி
சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கூட்டரங்கங்கள் திறப்பு விழாவும், 600 குழுக்களுக்கு சுழல்நிதி உதவி வழங்கும் விழாவும் சென்னை ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 600 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.11/2 கோடி நிதி உதவிகளை வழங்கியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கூட்டரங்களை திறந்துவைத்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த விழாவில் 600 நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியமாக ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் 60 லட்சமும், வங்கிக்கடனாக ரூபாய் 15 ஆயிரம் வீதம் ரூ.90 லட்சமும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, சென்னை மாநகரில் உள்ள 10 மண்டலங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறந்த முறையில் செயல்படும் வகையில் ரூ.25 லட்சத்தில் கூட்ட அரங்கங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்ட அரங்கங்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் கூட்டங்கள் நடத்துவதற்கும், பயிற்சிகள் வழங்குவதற்கும் கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.
நகர்ப்புற சுயஉதவிக்குழு
ஊரகப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பொன்விழா கிராம வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் பயிற்சிக் கூடங்களும் தொழிற்பயிற்சி மையங்களும் அமைத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கும் பயிற்சிக் கூடங்கள் கட்டப்பட்டு அவை திறந்து வைக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.
ஏற்கனவே, ஊரகப் பகுதிகளில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு மட்டுமே மானியத்துடன் கூடிய சுழல்நிதி வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நகர்ப்புற சுயஉதவி குழுக்களுக்கும் மானியத்துடன் கூடிய சுழல்நிதி வழங்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அறிவித்தேன். அதன்படி, கடந்த ஆண்டு 5000 குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் சுழல்நிதி மானியம் வழங்கப்பட்டது.
இதற்காக மொத்தம் 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூபாய் 25 கோடி மதிப்பில் சுழல்நிதி மானியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவினருக்கும் தலா ரூபாய் 10 ஆயிரம் மானியமாகவும் ஏறத்தாழ 30 ஆயிரம் ரூபாய் வங்கிக்கடனாகவும் வழங்கப்படுகிறது.
ரூ.7 கோடி மானியம்
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 2000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2 கோடி ரூபாய் சுழல்நிதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்குள் 7 ஆயிரத்து 721 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வண்ணம் ரூ.7 கோடியே 72 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இக்குழுக்களுக்கு சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் உதவி வழங்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக ரூபாய் 10 ஆயிரமும், வங்கிக் கடனாக ரூபாய் 15 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறப் பகுதிகளில் வங்கிக் கடனாக ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. இவ்வாறு சுழல்நிதி மானியத்துடன் வங்கிக்கடன் உதவி பெற்றுள்ள 90 சதவிகிதத்திற்கு மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் வங்கிக் கடனை சரிவர தொடர்ந்து செலுத்தி உள்ளனர். பெண்களை பொறுத்த வரை வங்கி கடன்களை சரியான முறையில் செலுத்துவதால் வங்கிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு பெண்களுக்கு கடன் உதவிகளை வழங்குகின்றனர்.
அதிக கடன் உதவி
ஏற்கனவே வழங்கப்பட்ட வங்கிக் கடன் மூலம் சிறிய தொழில் முயற்சிகளை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. பெரிய அளவிலான தொழில்களை துவங்குவதற்கு ஏதுவாக நிலுவை ஏதுமின்றி மாதந்தோறும் சிறப்பான முறையில் வங்கிக் கடனை திரும்ப செலுத்தும் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக வங்கிக் கடன் உயர்த்தி வழங்க மத்திய நிதித்துறை அமைச்சருடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
கடனை திருப்பி செலுத்தும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிகள் மூலம் மீண்டும் அதிக கடன் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பயிற்சிக்கான தினப்படி ரூ.7.50 லிருந்து ரூ.45 ஆக தற்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. உறுப்பினர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சுய உதவிக்குழுக்கள் அவற்றின் உற்பத்தி பொருட்களை பொறுத்த ஒப்பந்த புள்ளிகளுக்கு வைப்புத்தொகை செலுத்த வேண்டியதில்லை என அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து நகர்புற பகுதிகளிலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இதன் மூலம், பெரிய அளவிலான தொழில்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி, விதவை பெண்களுக்கு நிதி உதவி, வேலை வாய்ப்பில் 30 சதவிகிதம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பெண்கள் தன்னம்பிக்கையுடன் அரசு வழங்குகின்ற நிதியினை நல்லமுறையில் பயன்படுத்தி வங்கிகளுக்கு பெற்ற நிதியினை திருப்பி செலுத்தி முன்னேற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கொட்டும் மழை
விழாவில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, இணை கமிஷனர் காகர்லா உஷா, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வராஜ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சைதை ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மழை கொட்டியது. இதனால் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மழையில் நனைந்தபடியும், நாற்காலிகளை தலையில் தூக்கிவைத்துக்கொண்டும் விழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தாலும் 600 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கையால் நிதி உதவிகளை வழங்கினார்.