காங்கிரஸ் கட்சியின் 122 ஆண்டு கால வரலாற்றில், 10 ஆண்டுகளாக தலைவர் பதவியில் நீடித்து புதிய சாதனை படைத்துள்ளார் சோனியா காந்தி.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நரசிம்மராவ் மற்றும் சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் , அக்கட்சியின் செல்வாக்கு மக்களிடத்தில் அடியோடு சரிந்தது.
இந்த சந்தர்ப்பத்தை பா.ஜனதா அருமையாக பயன்படுத்திக் கொண்டு , கட்சியை மளமளவென வளர்த்துக் கொண்டு வந்தது.உத்தரபிரதேசம் , மத்திய பிரதேசம் உள்பட பல வட மாநிலங்களில் காங்கிரசின் ஓட்டு வங்கியை பா.ஜனதா தனது பக்கம் வளைத்துப் போட ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான் , இனியும் தாமதித்தால் கட்சி காணாமல் போய்விடும் என்ற சுதாரித்த சில மூத்த தலைவர்கள், ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தியை சந்தித்து , கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு வலியுறுத்தினர்.ஆனால் சோனியா முதலில் அதற்கு சம்மதிக்கவில்லை.
பொது வாழ்க்கைக்கு வந்ததன் பரிசாக தனது மாமியார் இந்திரா காந்தி மற்றும் கணவர் ராஜீவ் காந்தி ஆகியோரை பலி கொடுத்துவிட்டு , மீண்டும் அரசியலில் நுழைவது அவசியமா என்ற கேள்வியுடன் அவர் அக்கோரிக்கையை ஏற்க மறுத்தார்.
ஆனால் கட்சிக்கு செல்வாக்கு மிக்க தலைவர் ஒருவர் இல்லை என்றால் , கட்சியின் செல்வாக்கு அதலபாதாளத்திற்கு போய்விடும் என எடுத்துக் கூற , நீண்ட யோசனைக்கு பின்னரே, கடந்த 1998 ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியை ஏற்க அவர் சம்மதித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா வருவதை காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலரே முதலில் எதிர்த்தனர்.ஆனால் அந்த எதிர்ப்புகள் மற்றும் தனது திறமைகள் குறித்து எழுந்த விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் வெற்றி மூலம் பதிலளித்தார் சோனியா.
அதிலும் கடந்த 2004 ம் ஆண்டு , நாட்டின் அப்போதைய எதார்த்த அரசியல் நிலையை புரிந்துகொண்டு , பா.ஜனதாவுக்கு எதிரான சக்திகளை
ஓரணியில் திரட்டி ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கி பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார்.
காங்கிரஸ் வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில் மத்தியில் கூட்டணி அரசுக்கு சம்மதித்து , காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைக்க வழி செய்தார்.இது ஒரு சாதனை என்றால் மற்றொரு சாதனை பிரதமர் பத்வியை ஏற்க மறுத்து , அதே நேரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வழிநடத்தும் அதிகாரம் மிக்க பெண்ணாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் சோனியா.அவரது இந்த சாதனை மகுடத்தில் , காங்கிரஸ் கட்சி வரலாற்றில் தலைவர் பதவியை 10 ஆண்டுகளாக வகித்தவர் என்ற பெருமையும் வைரமாக ஜொலிக்கிறது என்றால் அது மிகையில்லை !
இப்போது மத்திய அரசிலும், கட்சியிலும் மட்டுமல்லாது உலகின் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் சோனியா !
அடுத்ததாக தனது மகன் ராகுல் காந்தியை அமைச்சராக்க வேண்டும் என கட்சியில் பல தலைவர்கள் வலியுறுத்தியபோதிலும், அவசரப்படாமல் அவரை கட்சியின் பொதுச் செயலாளர் , எம்.பி. என்ற அளவிலேயே படிப்படியாக பிரதமர் பதவிக்கு தயார்படுத்துவதையும் அரசியல் வட்டாரங்கள் கவனிக்காமல் இல்லை.
அநேகமாக 2008 அல்லது 2009 ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறதோ இல்லையோ , அதற்கடுத்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியே தேர்தலை சந்திக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் , சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 10 ஆண்டுகள் பூர்த்தியாவதையொட்டி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமைய்ல் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு கூட்டத்தில், சோனியாவின் திறமையான மற்றும் தைரியமான தலைமைக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாராட்டு நியாமானதுதான் !