காங்கிரஸ் தலைவர் பதவியில் 10 ஆண்டுகளாக நீடித்து சாதனை படைத்ததற்காக, சோனியா காந்திக்கு மன்மோகன்சிங் நேரில் வாழ்த்து தெரிவித்தார். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்தினர்.
தலைவர் பதவி
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி, கடந்த 1998-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி ஏற்றுக்கொண்டார். அவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் இப்பதவியில் நீடித்து வருகிறார். காங்கிரஸ் கட்சி வரலாற்றில் வேறு எந்த தலைவரும், 10 ஆண்டுகள் தொடர்ந்து இந்த பதவியில் இருந்தது இல்லை.
இதன்மூலம், காங்கிரஸ் தலைவர் பதவியில் 10 ஆண்டுகளாக நீடித்து வரும் முதலாவது தலைவர் என்ற பெருமையை சோனியா பெற்றுள்ளார். இத்தனை ஆண்டுகள் பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
மன்மோகன்சிங் வாழ்த்து
இதையொட்டி, சோனியா காந்திக்கு நேற்று வாழ்த்துகள் குவிந்தன. பிரதமர் மன்மோகன்சிங் முதல் நபராக சோனியா காந்தி வீட்டுக்கு சென்று வாழ்த்தினார். சோனியாவுக்கு அவர் சால்வை பரிசளித்தார்.
சோனியா காந்தியின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தியும் நேரில் வாழ்த்து தெரிவித்தார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரபா தாக்குர், டெல்லி மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் சீமா அபித், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் சோனியா காந்திக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டர்கள் கொண்டாட்டம்
மேலும், சோனியா வீட்டுக்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் குழுமி இருந்தனர். அவர்கள் இசைக்கருவிகளை இசைத்து, அதற்கு தக்கபடி நடனம் ஆடினர். இனிப்பு வழங்கி கொண்டாடினர். `சோனியா ஜிந்தாபாத்' என்று கோஷமிட்டனர். `ராஜீவ்-சோனியா' உருவம் பொறித்த பேனர்களை கையில் ஏந்தி இருந்தனர். ஏராளமான பெண்களும் சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சோனியா வீட்டுக்கு அருகில்தான் காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கும் ஏராளமானோர் கூடி, சோனியா 10 ஆண்டுகள் தலைவர் பதவியில் நீடிப்பதை கொண்டாடினர். இதனால் தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.