தமிழகத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தலைமையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் முன்னிலையில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் காலை 11.30 மணியளவில் சத்தியமூர்த்தி பவனிலிருந்து வேட்பாளர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோருடன் புறப்பட்டு தலைமைச் செயலகம் சென்றனர்.
அங்கு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை மதியம் 12 மணியளவில் தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் இவ்விருவருக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 5 பேர் போட்டியிடும் நிலையில், திமுக வேட்பாளர்கள் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் கடந்த புதன்கிழமையன்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரெங்கராஜன் நேற்றும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.