முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் இந்தியாவுக்கு ஜனநாயகத்தை வழங்கியவர் என்று லண்டனில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் ஸ்வராஜ் பால் கூறினார்.
சர்வதேச பெண்கள் தினம் லண்டனில் உள்ள நேரு மையத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய தொழிலதிபர் ஸ்வராஜ் பால், இந்தியாவின் மிகப் பெரிய பிரதமர் இந்திரா காந்தி என்றார்.
காந்தியும் நேருவும் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர். இந்திரா காந்தி, ஜனநாயகத்தை கொடுத்தார்.
என்றாவது ஒரு நாள் அவரை அமெரிக்கா அழித்துவிடும் என்று இந்திரா காந்தி உறுதியாக நம்பினார். அவசர நிலைப் பிரகடனப்படுத்தி அதை அகற்றிய ஒரே பிரதமர் உலகில் அவர் ஒருவர்தான். அவசர நிலையை அவர் அறிவித்தபோது அவரை நான் ஆதரித்தேன்.
அவர் பதவியில் இல்லாதபோதும் அவரை நான் ஆதரித்தேன். எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க இந்திரா காந்தி முன்வந்தபோது நான் ஏற்கவில்லை என்றார் ஸ்வராஜ் பால்..
இந்திரா காந்தியின் அருமை பெருமைகள் அவர் இறந்த பிறகுதான் பலருக்கும் புரிந்தது. அவரைப் போன்ற திறமையான பிரதமரை இந்தியா கண்டதில்லை. ராஜீவ்காந்தி சிறப்பாக ஆட்சி நடத்தினார். ஆனால் இந்திரா காந்தி வித்தியாசமானவர்.
பொருளாதாரக் கட்டுப்பாட்டை தளர்த்த முதலில் முயற்சித்தவர் அவர்தான். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அவர் அழைத்தார். ஆனால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரது முயற்சியை தடுத்துவிட்டனர்.
இந்தியா மீது யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று இந்திரா காந்தி விரும்பினார். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்றார் ஸ்வராஜ் பால்.