எந்த வித பரபரப்பும், பலத்த பாதுகாப்பும் இன்றி, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா மிக ரகசியமாக, சென்னை வழியாக வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு நேற்று சென்று திரும்பினார்.
பொற்கோவில்
வேலூர் அருகே அரிïரில் ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் பொற்கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த பொற்கோவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த கோவில் சார்பில் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு நலப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இது ஒரு சுற்றுலா தலம் போல மாறிவிட்டது. வேலூர் வருவோர், இங்கு தவறாமல் வந்து செல்கிறார்கள்.
தமிழகம் வரும் வட மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் கூட தவறாமல் இங்கு வந்து செல்கிறார்கள். தமிழக சுற்றுலா துறை இந்த கோவிலுக்கு சுற்றுலா பஸ்களை இயக்கும் அளவுக்கு மிக வேகமாக இந்த கோவில் வளர்ச்சி பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த கோவில் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பிரியங்கா
இந்த கோவிலுக்கு நேற்று, மிக, மிக முக்கிய பிரமுகர் ஒருவர் ஓசைப்படாமல் டெல்லியில் இருந்து வந்து சாமி கும்பிட்டு விட்டு திரும்பியிருக்கிறார். சென்னைக்கு காலை 10 மணியளவில் வந்த விமானத்தில் பயணம் செய்த அந்த வி.வி.ஐ.பி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா ஆவார். அவரது வருகை மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
அந்த விமானம், சென்னை விமான நிலையத்தை அடைந்ததும் அதன் அருகிலேயே ஒரு சாதாரண கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய இருவர், பிரியங்காவை வரவேற்று அந்த காரில் உட்கார வைத்துக்கொண்டார்கள்.
கண்ணீர் மல்க அஞ்சலி
அதன்பிறகு, அந்த கார் அங்கிருந்து விர்ரென்று வேலூர் பொற்கோவிலுக்கு புறப்பட்டது. அந்த காரில் சிவப்பு விளக்கு கூட இல்லை என்று கூறப்படுகிறது. அந்த காருக்குப் பின்னால் எந்த வாகனமும் பாதுகாப்புக்காக செல்லவில்லை. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேலூர் பொற்கோவிலுக்கு போகும் வழியில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை, ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் காரை நிறுத்துமாறு பிரியங்கா உத்தரவிட்டார். அதன்பிறகு நினைவிடத்துக்கு பயபக்தியுடன் சென்ற அவர், தனது தந்தை உயிர்நீத்த இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு உடனே புறப்பட்டார்.
மகாலட்சுமி சன்னதி
சுமார் 12.30 மணி அளவில் அவர் வேலூர் பொற்கோவிலை அடைந்தார். அங்கு பக்தர்களோடு, பக்தையாக `கிï' வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். மகாலட்சுமி சன்னதி முன்பு மட்டும் சுமார் 10 நிமிடங்கள் அவர் சாமி கும்பிட்டார். யாரும் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, தனது தலையில் துப்பட்டாவால் முக்காடு போட்டிருந்தார்.
அருகில் இருந்த பக்தர்கள், யாரோ வடநாட்டு இளம்பெண் வந்திருப்பதாக கருதி கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்கள். அங்கு அரை மணி நேரம் அவர் கோவில் முழுவதும் நடந்து சென்று சுற்றிப்பார்த்தார். அப்போது மட்டும் அங்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காரணம் என்ன?
பிறகு, 1.15 மணி அளவில், பிரியங்கா அங்கிருந்து மீண்டும் காரில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்குப் புறப்பட்டார். பிறகு மாலை 5.30 மணி அளவில் அவர் டெல்லி விமானத்தில் ஏறி ஊர் திரும்பினார். பிரியங்காவுடன் மொத்தம் 6 பேர் வந்ததாக தெரிகிறது.
பிரியங்காவின் இந்த வருகைக்கு மத்திய உளவுப்பிரிவினரும், எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினருமே ஏற்பாடு செய்துள்ளார்கள். பிரியங்காவின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதால் அவரது வருகை பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
தமிழக காவல்துறையினருக்குக் கூட அவரது வருகை பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை. பிரியங்காவின் பாதுகாப்புக்காக கூட அவர்களது உதவியை, மத்திய உளவுப்பிரிவினர் கோரவில்லை.
பிரியங்கா, சென்னை வந்து வேலூர் சென்றபிறகே தமிழக போலீசாருக்கு இது பற்றிய தகவல் கசிந்ததாகத் தெரிகிறது. ஆனால், கடைசி வரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்ளூர் பிரமுகர்களுக்கு கூட பிரியங்கா, சென்னை வந்து சென்ற விஷயம் தெரிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது.