தமிழகம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், இதுவரை வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தொடர் மழையின் காரணமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து கொண்டு இருக்கிறது.
தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, தஞ்சை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன; விளை நிலங்கள் வெகுவாக சேதமடைந்தன.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆற்றையொட்டி வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கடந்த இரு நாட்களாக மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், உப்பளங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. இம்மாவட்டங்களில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதால், நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகம மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு கனத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையிலும் அடுத்த 48 மணி நேரங்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.