முதல்- அமைச்சர் கருணாநிதி இன்று பேட்டி அளித்த போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுகிறார்.
மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி- தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கும், அமைச்சர் துரைமுருகன்- காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்று வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வார்கள்.
மற்ற மாவட்டங்களின் அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் அவரவர் மாவட்டங்களில் துயர் துடைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆங்காங்கே சென்று அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் நிவாரண பணி மேற்கொள்ள வேண்டிய அவசர முக்கியத்துவம் கருதி அதற்கு வசதியாக வரும் 24, 25-ந்தேதிகளில் சட்டப் பேரவை கூட்டத்தை 2 நாட்கள் ஒத்தி வைக்கப்படுகிறது.
இதுபற்றி சபாநாயகர் ஆவுடையப்பன், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் போனில் கலந்து பேசிய பிறகு, அவர்கள் ஒப்புதல் பெற்ற பிறகு 2 நாட்களுக்கு சட்டசபை ஒத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.