சிறிலங்கா இராணுவத்திற்கு தொடர்ந்தும் ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கும் இந்திய அரசை எதிர்த்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு சென்னையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்தமையால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஒருங்கிணணப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று பிற்பகல் சென்னை அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் விக்ரோறியா மெமோறியல் அரங்கத்தின் முன் தமிழின உணர்வாளர்கள் திரண்டனர். மாலை 4:00 மணியளவில் பெரும் எண்ணிக்கையிலான தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும், இந்திய அரசைக் கண்டிக்கும் பதாகைகளை ஏந்திக் கொண்டும், இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் எதிராக உணர்வெழுச்சியுடன் முழக்கமிட்டுக் கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.
ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுத உதவி வழங்கும் இந்திய அரசையும், அதைத் தடுத்து நிறுத்தாத தமிழக அரசையும் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பழ.நெடுமாறன், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
கொடுக்காதே கொடுக்காதே
தமிழர்களைக் கொல்ல
சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்காதே
இந்திய அரசே இந்திய அரசே
தமிழர்கள் உன் பகைவர்களா
இந்திய அரசே இந்திய அரசே
சிங்களவன் உன் பங்காளியா
உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர். 50-க்கும் மேற்பட்ட பெண்களும், சிறார்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் இரவு 7:30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஆனூர் ஜெகதீசன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் செயலாளர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன், மற்றும் தமிழ்நாடு மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தினரும் பெருமளவிலான தமிழ் உணர்வாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.