தங்களுடைய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஜனநாயக உரிமைகளை திமுக அரசு தொடர்ந்து பறித்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தமிழரைப் படுகொலை செய்ய சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் வழங்கி வரும் இந்திய அரசைக் கண்டிக்கும் வகையில், சனிக்கிழமை நாங்கள் நடத்த இருந்த கண்டன ஆர்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடைசி நிமிடம் வரை எதுவும் கூறாமல் சனிக்கிழமை (22.03.08) அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயர் நீதிமன்றம் சென்று நாங்கள் அனுமதி பெறுவதைத் தடுக்கவே இத்தகைய சட்ட விரோதமான வழியை காவல்துறை கடைப்பிடிப்பது வழக்கமாகி விட்டது.
திமுக ஆட்சியில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முறை எங்களுக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் கண்டித்துத் தீர்ப்புகள் வழங்கி உள்ளது. ஆனாலும், திரும்ப திரும்ப ஜனநாயக உரிமைகளை திமுக அரசு தொடர்ந்து பறித்து வருகிறது.
அரசியல் சட்டம் வழங்கி இருந்த கருத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை அனைத்தும் திமுக ஆட்சியில் மறுக்கப்படுகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளும் அலட்சியப்படுகின்றன என்று கூறியுள்ளார்.