இந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக கோடை காலத்தில் பெய்த அடைமழை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களை வெள்ளக்காடாக்கி விட்டது.
வெளுத்து வாங்கிய மழை
மாலத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்றும் மழை நீடித்தது.
பலத்த சேதம்
இந்த திடீர் மழை நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மழையினால் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வழிந்ததாலும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், உளுந்து, வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. மழைக்கு மாநிலம் முழுவதும் 23 பேர் பலியாகி உள்ளனர்.
கருணாநிதி உத்தரவு
உடனடி வெள்ள நிவாரண பணிகளுக்காக நேற்று முன்தினம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்களை யெல்லாம் அவரவர்களுடைய மாவட்டங்களுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன் மழையினால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, வெள்ள நிவாரண பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை-வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.
இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை சென்ற அவர், பின்னர் அங்கிருந்து கார் மூலம் விருதுநகர் சென்றார். அந்த மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார்.
தண்ணீரில் நடந்து சென்றார்
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் 2 அடி உயரத்துக்கு தேங்கி நின்ற மழை நீரில் நடந்து சென்று அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள அண்ணா திருமண மண்டபத்துக்கு சென்று, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, வேட்டி-சேலை, மண்எண்ணை, ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்கும் சென்று மழை சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி ராதிகா செல்வி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சென்று இருந்தனர்.
இரவில் நெல்லை சென்று தங்கிய அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) நெல்லை மாவட்டத்திலும், நாளை ராமநாதபுரம் மாவட்டத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
அமைச்சர்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையை யொட்டியுள்ள ஆயப்பாக்கம், நல்லாத்தூர், பொம்மராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். தஞ்சை மாவட்டத்தில் அமைச்சர் கோ.சி.மணியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் சுரேஷ்ராஜனும் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் பன்னீர் செல்வம் நாகை மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டார்.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் அமைச்சர் தமிழரசியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் சுப.தங்கவேலனும், சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பனும், திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் நேருவும், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமியும் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டனர்.
இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் மழை சேத பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.