பிஜேபி மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான எல்.கே. அத்வானிக்கு முதலமைச்சர் மு கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சோனியா காந்தியின் வீட்டுக்கு சென்று பிஜேபி தலைவர் அத்வானி ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய பண்பாடு. அத்தகைய அரசியல் நாகரிகம் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்திலே வளர்ந்திட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு எந்த அணையும் கட்டப்படவில்லை என்று சரத்குமார் கூறியிருப்பதற்கு பதிலளித்துள்ள கருணாநிதி, திமுக ஆட்சியின் போது சித்தாறு 1, சித்தாறு 2, பொய்கையாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடி ஆறு, கடானா, ராமா நதி, அடவி நயினார் கோயில், சாஸ்தா கோயில் அணை, மஞ்சலாறு அணை, மணிமுத்தா நதி அணை, கோலையாறு அணை, பரப்பலாறு அணை, பொன்னணி ஆறு, மார்தானா ஆணை உள்ளிட்டவை கட்டப்பட்டதாக பட்டியலிட்டுள்ளார்.
பால் விலை அதிகம் என்று விஜய டி ராஜேந்தர் கூறியிருப்பதற்கு பதிலளித்துள்ள அவர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவுதான் என்றும், தயாரிப்பு செலவை கணக்கிட்டு திரைப்படங்களின் வினியோக விலை நிர்ணயிக்கப்படுவது போல்தான் பால் உற்பத்தி விலையை கணக்கிட்டுதான் பால் விற்கும் ஏழை விவசாயிகள் விற்பனை விலையை நிர்ணயிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
நல வாரியங்கள் வருவாய்த் துறையிடம் பரிசோதனை முயற்சியாக ஆறு மாதங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும், அரசின் சார்பில் நடக்கும் காரியங்கள் மற்றும் வாரியங்கள் முதலமைச்சர் கண்காணிப்பில் நடைபெறுபோது வீண் கவலை தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளை சிறப்பாக நடத்த பட்ஜெட்டில் எந்த விசேஷ திட்டமும் இல்லை என்று விஜயகாந்த் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள கருணாநிதி, பட்ஜெட்டில் 36வது பத்தியிலிருந்து 49வது பத்தி வரை சொல்லப்பட்டுள்ள அனைத்தும் பள்ளிகளை சிறப்பாக நடத்துவதற்கான விசேஷ திட்டங்கள் தான் என்று கூறியுள்ளார்.
கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறைவு என்று சொல்லுவதும் தவறான தகவல் என்று அவர் தெரிவித்துள்ளார்.