தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.4,000-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தில் இன்று கேள்விநேரம் ஒத்திவைக்கப்பட்டு, வெள்ள சேதம் மற்றும் அதற்கான நிவாரணப் பணிகள் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் பேசினர்.
அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், மாநிலம் முழுவதும் 47,257 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன என்றும், தானியம் - பருப்பு வகை பயிர்கள் 2,79,143 ஹெக்டேர் நிலத்தில் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு, பேரிடர் இழப்பு சமயத்தில் நிவாரண உதவியாக பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க அனுமதித்துள்ளது என்ற அவர், இந்த நிவாரணம் போதாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருப்பதை ஏற்று பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வீதம் (ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,000) இழப்பீட்டு தொகை வழங்க முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
நெற்பயிர்களை தவிர மழையை மட்டுமே நம்பியிருக்கும் மற்ற பயிர்களான வேளாண்மை பயிர்கள், தோட்டப்பயிர்களுக்கு 50 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இழப்பு ஏற்பட்டிருந்தால், ஹெக்டேருக்கு ரூ.2,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், இதே பயிர்கள் பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களில் பாதிப்படைந்திருந்தால், ஹெக்டேருக்கு ரூ.4,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மா, புளி போன்ற நிரந்தரப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,000 வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்ற அமைச்சர், இந்த இழப்பீட்டுத் தொகையை அளிப்பதால் ஏற்படும் கூடுதல் செலவு, மாநில அரசின் நிதியிலிருந்து செலவழிக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.