காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தியை சீனாவுக்கு வருமாறு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அந்நாட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் , சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று டெல்லி வந்துள்ளது.இக்குழுவினர் டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் , அக்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசியது.
ராஜீவ் காந்தி சீனாவுக்கு சென்று 20 ஆண்டுகள் ஆனதை குறிப்பிடும் வகையில் , சீன தலைநகர் பீஜிங்கில் காங்கிரஸ் மற்றும் சீன கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கருத்தரங்கு ஒன்றை நடத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கபட்டது.
அப்போது சீனா வரும் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவிற்கு ராகுல் காந்தியை தலைமையேற்று அழைத்து வருமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.
இந்த அழைப்பின் பேரில் ராகுல் சீனா செல்வாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன