சிறிலங்கா அரசாங்கம் வேறு தரப்பிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் பெறுவது தெற்காசியாவில் எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்திய வான்படைத் தளபதி பி.சி.லாலின் 25 ஆம் ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய எம்.கே.நாராயணன், சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவு குறித்து கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கை இனப்பிரச்சினைக்கு எந்தவொரு அதிகாரப்பகிர்வு தொடர்பான தீர்வையும் முன்வைக்காது, தனியாக இராணுவத் தீர்வை மட்டுமே இலக்காக வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரைத் தொடர்கிறது சிறிலங்கா அரசாங்கம்.
தெற்காசியாவில் இந்தியாவின் இராணுவ உச்சக்கட்டப் பலத்தை, சிறிலங்கா அரசாங்கத்தில் அபரிமிதமான ஆயுதக் கொள்வனவு எதுவிதத்திலும் தளம்பல் நிலைக்குத் தள்ளக்கூடாது என்பதில் இந்திய அரசாங்கம் உறுதியாக இருக்கும்.
தமிழர்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.
இலங்கையின் தற்போதைய நிலைமையை நாம் அவதானிக்கும்போது, அமைதி முயற்சிகள் அனைத்தும் முறிவடைந்து போகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. இது மிகவும் மோசமான ஒரு நிலைமைக்கு எம்மை இட்டுச் செல்லும்.
எனவே, இலங்கையில் மிகப்பெரிய சிறுபான்மைத் தமிழினமான ஈழத் தமிழர்களை, சிறிலங்கா அரசாங்கம் கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்பதே எமது விருப்பம்.
கடந்த இரண்டு வருடத்தில் சிறிலங்கா அரசாங்கப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரில் பல்லாயிரககணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காண்பதனை இந்தியா எதிர்ப்பதுடன் சிறுபான்மை இனத்திற்கு அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தும்படியும் கொழும்பை இந்திய வலியுறுத்துகிறது.
சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எவ்வளவு அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்பது தொடர்பாகவும், எவ்வளவு இராணுவ உதவிகளை வழங்கலாம் என்பது தொடர்பிலும், எமக்கு இடையே ஒரு தேசிய முடிவு எட்டப்பட வேண்டும்.
இராணுவப் பயிற்சிகளை இந்தியா தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு வழங்கி வருகின்ற போதிலும், வலிந்த தாக்குதல் தொடுக்கவல்ல இராணுவத் தளபாடங்கள் என்று கருதப்படுகின்றவற்றை சிறிலங்காவுக்கு வழங்க இந்தியா மறுத்தே வருகின்றது என்றார் அவர்.