இந்தியாவின் பிரபல வர்த்தகக் குழுமமான டாட்டா மோட்டார் நிறுவனம் பிரிட்டனிலுள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜாக்குவார் மற்றும் லாண்ட் ரோவர் நிறுவனங்களை புதன்கிழமை வாங்கியது.
இந்த இரு நிறுவனங்களையும் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து இரண்டு பில்லியன் பவுண்ட்டுகளுக்கு வாங்கியுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவில் பெரிதும் மதிக்கப்படும் ஒரு நிறுவனமாக டாட்டா குழுமம் திகழ்ந்து வருகிறது. எஃகு, வாகனத் தயாரிப்பு, பெரிய ஹோட்டல்கள், தொலைத் தொடர்ப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் தனது ஆளுமையை செலுத்தி வரும் ஒரு நிறுவனமாக அந்தக் குழுமம் திகழ்கிறது.
கடந்த ஜனவரி மாதம் உலகின் மிகக் குறைந்த விலையுடைய காரான நேனோவை அறிமுகப்படுத்தியது.
இந்தியா பிரிட்டிஷ் அரசில் ஒரு காலனி நாடாக இருந்தபோது அதாவது 19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே டாட்டா தனது தொழிலை ஆரம்பித்து விரிவுபடுத்தத் தொடங்கியது.
தற்போது உலக அளவில், 80 நாடுகளில், 96 நிறுவனங்களை உள்ளடக்கி சுமார் 22 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனமாக டாட்டா குழுமம் திகழ்கிறது. உலகளவில் டாட்டா குழுமத்தில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பணியாளர்கள் பணி புரிகிறார்கள்.
உலக அளவில் பொருளாதார வல்லமை எப்படி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்கிறது என்பதற்கு, ஜாக்வார் மற்றும் லாண்ட் ரோவர் நிறுவனங்களை டாட்டா மோட்டார்ஸ் வாங்கியது ஓர் உதாரணம் என்கிறார் எமது பொருளாதாரச் ஆசிரியர் ரோபர்ட் பெஸ்டன்.
சொகுசுக் கார்கள் என்று வரும்போது உலக அளவில் ஜாக்குவார் மற்றும் லாண்ட் ரோவர் கார்கள் முத்திரை பதித்துள்ளன. உலகச் சந்தையில் ஜாக்குவார் கார் 75,000 பவுண்டுகளும், லாண்ட் ரோவர் 60,000 பவுண்டுகளுக்கும் விற்கப்படுகிறது