மதுவிலக்கு பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடு என்ன? தமிழக அரசின் கொள்கை என்ன? முதல்வர் கருணாநிதியின் கொள்கை என்ன? என்பதை விளக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
.
2011ல் தமிழகத்தில் மக்கள் ஆதரவோடு அமையும் கூட்டணி ஆட்சியில் பாமக இடம்பெறும் என்றும் அப்போது கையெழுத்தாகும் முதல் கோப்பு பூரண மதுவிலக்கு குறித்த கோப்பாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் இன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல் படுத்தக்கோரி 10 ஆண்டுகளாக எங்கள் கட்சியின் மகளிர் அமைப்பு போராடி வருகிறது. இந்நிலையில், சட்டமன்றத்தில் பேசிய ஒரு அமைச்சர், ராமதாசும், அன்புமணியும் நேரடியாக சோனியா காந்தியையும், பிரதமரையும் நேரடியாக சந்தித்து மதுவிலக்கு குறித்து ஏன் வலியுறுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.
இன்னொரு அமைச்சரோ, ஏதோ நாங்கள் (திமுக) தான் மது கடைகளை திறந்து குடிகாரர்களை பெருக்குவது போல பாமக பேசிவருவதாக கூறியுள்ளார். இவர்கள் இருவரும் இதுகுறித்த சரித்திரம் தெரியாமல் பேசுகிறார்கள்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 47வது பிரிவின் படி மதுவிலக்கை அமல் படுத்தும் உரிமை அந்தந்த மாநிலத்திற்கே உள்ளது. இதற்கு மத்திய அரசு தேவையில்லை.
1971ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு சிறப்பாக செயல்பட்டு வந்தது.
ஆனால், அப்போதும் இப்போதும் முதல்வராக உள்ள கருணாநிதிதான் இந்த மதுவிலக்கை தளர்த்தினார். மதுவிலக்கை அமல்படுத்த கூறினால் மற்ற மாநிலங்களை இவர்கள் உதாரணப்படுத்துகிறார்கள்.
குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் அந்த மாநிலம் வளர்ச்சியில் முதல் மாநிலமாக திகழ்கிறது. ஆந்திரா, அரியானா, மிசோராம், மேகாலயா போன்ற மாநிலங்களிலும் மதுவிலக்கு அமலில் இருக்கிறது.
ஆகவே மற்ற மாநிலங்களை இவர்கள் உதாரணப் படுத்தாமல் மதுவிலக்கு பிரச்சனை யில் திமுகவின் நிலைப்பாடு என்ன? தமிழக அரசின் கொள்கை என்ன? முதல்வரின் கொள்கை என்ன? என்பதை விளக்க வேண்டும்.
"யங் இந்தியா' பத்திரிக்கையில் மூதறிஞர் ராஜாஜி, ஏழைகள் விழுந்து சாக அரசு குழிகளை தயாரித்து கொடுக்கிறது என்று மதுக் கடைகள் பற்றி எழுதியுள்ளார். 1971ல் மதுவிலக்கு தளர்த்தப்பட்ட போது ராஜாஜி, கருணாநிதியின் வீடு தேடி சென்று மதுவிலக்கை தளர்த்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். இந்த வரலாறெல்லாம் அந்த அமைச்சர்களுக்கு
தெரியாது.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் கர்நாடக அரசு ஒரே ஆணையில் 5 ஆயிரம் சாராயக்கடைகளை மூடியது. இதனால் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மதுவிலக்கு கொள்கை யில் தீவிரம் கொண்டுள்ளது.
மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதனை 24 மணி நேரத்தில் தடுத்து நிறுத்த என்னிடம் யோசனை உள்ளது. காவல் துறையை சரியான வழியில் செலுத்தினால் அதனை தடுக்க முடியும்.
மேலும், டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமானம் வருவதாக கூறி மக்களின் உடல் நலத்தையும், குடும்ப நலத்தையும் இவர்கள் கெடுக்கிறார்கள். மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன.
2011ல் மக்கள் ஆதரவோடு தமிழகத்தில் அமையும் கூட்டணி ஆட்சியில் நாங்கள் இருப்போம். அப்போது கையெழுத்தாகும் முதல் கோப்பு பூரண மதுவிலக்கு குறித்த கோப்பாகத்தான் இருக்கும்.
அத்தியவசிய பொருட்களின் விலைவாசி தற்போது தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்கு காரணம் பண வீக்கம், உலக நாடுகளில் நிலையில்லா நிலைமை என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறுவதில் அர்த்தமில்லை.
உணவு பொருட்களின் முன் பேர வர்த்தக நடைமுறை தடை செய்யப்பட்டால் விலைவாசி உயர்வை தடுக்க முடியும். அதேபோல மாநில பொது விநியோக முறையை விரிவுபடுத்தி வலுப்படுத்த வேண்டும்.
இந்த அரசு மட்டுமின்றி எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அரிசி கடத்தல் நாளேடுகளின் செய்தியாகிறது. இதற்கு காவல் துறை அந்த குற்றவாளிகளை தயவு தாட்சண்யமின்றி கைது செய்ய வேண்டும்.
உழவர்களின் விளை பொருட்களுக்கு உரிய சரியான விலை கிடைப்பதில்லை. பயிரிட கடனும் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். கந்து வட்டிக்காரர்களின் பிடியில் உழவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத் தொழில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதர தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பது போல விவசாயத்திற்கும் வங்கிக் கடன் உதவி கிடைக்க வேண்டும்.
வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாடுகள் ஒழுங்குற அமைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். ஒகேனக்கல் விவகாரம் 40 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போனது ஆனால் கர்நாடகா இப்போது அதனை மீண்டும் கையில் எடுக்கிறது. இதற்கு பதிலடியாக நாங்களும், பெங்களூர் எங்களூர், கோலார் எங்களுக்கே என்று கேட்க வேண்டி வரும்.
எங்களை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் நாங்கள் இடம்பெறுவோம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார். பேட்டியின் போது பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.