விலைவாசி உயர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளையும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் துயரத்தை அரசியலாக்குவதை அனைத்துக் கட்சிகளும் தவிர்க்க வேண்டும் என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் பற்றாக்குறை நிலவுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவது, பதுக்கல்காரர்கள் மற்றும் முன்பேர வணிகர்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என்று அரசியல் கட்சிகளுக்கு அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து இடதுசாரிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவது தொடர்பான 6 அம்ச கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது