இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்தியக் கைதிகள் தமது விடுவிப்பதற்கு உதவுமாறு இந்திய மனித நேய அமைப்பொன்றிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் வந்த 43 பேர் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 16 வருடங்களுக்கு மேலாக சிறையில் காலத்தைக் கழிப்பவர்களும் அடங்குகின்றனர்.இந்தநிலையில் குறித்த கைதிகள் தம்மை விடுவிக்க உதவுமாறு "மனிதம்" என்ற இந்திய மனித நேய அமைப்பிற்கு கடந்த வாரம் எழுத்து மூலமான மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அநேகமானவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மனிதம் மனித நேய அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அக்னி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த கைதிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமானால் இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கிடையில் இது தொடர்பிலான உடன்படிக்கையொன்று அவசியம் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு நாடுகளைச் சேர்ந்த இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகள் அந்தந்த நாடுகள் இலங்கையுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டமையை இந்திய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.