மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலுக்கு மிகப்பெரிய ரவுடி கும்பல் உள்ளது. அந்த கும்பலில் முக்கியமானவனாக திகழ்ந்தவன் அஜீஸ் ரெட்டி என்ற பாபா ரெட்டி. இவன் ஐதராபாத்தில் வசித்து வந்தான்.
கடந்த 2004ம் ஆண்டு இவன் போலீசாரிடம் பிடிபட்டான். சமீபத்தில்தான் அவன் விடுதலை செய்யப்பட்டான். வெளியில் வந்ததும் மீண்டும் அவன் ரவுடித்தனத்தை காட்ட தொடங்கினான்.
நேற்று இரவு ஐதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு நிலப் பிரச்சினை தொடர்பாக அவன் கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தான். இது பற்றி ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவன் இருந்த வீட்டை இரவு 11.45 மணிக்கு போலீசார் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து அஜீஸ் ரெட்டியும், அவன் கூட்டாளிகளும் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் அஜீஸ் ரெட்டி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
அவனது கூட்டாளி குண்டு காயங்களுடன் தப்பி ஓடிவிட்டான்.
கொல்லப்பட்ட அஜீஸ் ரெட்டி மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஐதராபாத்தில் மட்டுமின்றி மும்பை போலீஸ் நிலையங்களிலும் இவன் மீது வழக்குகள் இருக்கின்றன.
சோட்டா ஷகீலுக்கு துணையாக இவன் வெளி நாடுகளுக்கும் சென்று கைவரிசை காட்டி உள்ளான். அவன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை ஐதராபாத் போலீஸ் கமிஷனர் பிரசாத ராவ் இன்று காலை உறுதிப்படுத்தினார்.