இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங் அவர்கள் கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயெ ராமச்சந்திரன் அவர்களின் இந்தக் கருத்தும் வந்துள்ளது.
இலங்கையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடக்கும் நிலையில், அங்கு ஒரு அரசாங்கமே மக்களின் மீது தாக்குதலை நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டும் ராமச்சந்திரன் அவர்கள், இந்த விடயத்தில் தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூட பிரச்சினையின் முழுமையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக இல்லை என்று கூறியுள்ளார்.